அதிர்ச்சி... 2.5 கோடி ஆதார் எண்கள் முடக்கம் - மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்குப் பின்னணி என்ன?
மத்திய அரசு நாடு தழுவிய அளவில் மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 2.5 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்களை முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, ஆதார் தரவுத்தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு முதன்மையான காரணம் உயிரிழந்தவர்களின் ஆதார் எண்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது ஆகும். ஒருவர் இறந்த பிறகு அவரது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி அரசு நலத்திட்டங்களைப் பெறுவது அல்லது அடையாள மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க இந்த எண்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஆதார் தரவுத்தளத்தில் உள்ள தகவல்கள் உண்மையானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய இந்தத் 'தூய்மைப் பணி' (Database Cleaning) நடத்தப்பட்டுள்ளது.
ஆதார் தகவல்கள் திருடப்படுவதைத் தடுக்கவும், மோசடிகளைத் தவிர்க்கவும் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன: பணப் பரிவர்த்தனைகளின் போது பயனாளி நேரில் இருப்பதை உறுதி செய்ய, 'உயிருடன் இருப்பதை கண்டறியும்' வசதியுடன் கூடிய முக அங்கீகார முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களின் கைரேகை மற்றும் கண் கருவிழித் தரவுகளை தாங்களாகவே 'லாக்' செய்து கொள்ளலாம். இதன் மூலம் மற்றவர்கள் அதனைப் பயன்படுத்த முடியாது. ஆஃப்லைன் அடையாளச் சரிபார்ப்பிற்குப் பாதுகாப்பான QR கோடு மற்றும் இ-ஆதார் முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. UIDAI அமைப்பு பயோமெட்ரிக் தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆதார் எண்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அந்தத் தரவுகளைப் பாதுகாப்பான முறையில் மட்டுமே சேமிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஆதார் செயலி மூலம் மக்கள் தங்களின் தரவுகளை எளிதாக மேலாண்மை செய்யலாம். அரசு பலன்களைத் தகுதியுள்ளவர்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்கவும், போலி அடையாளங்களை ஒழிக்கவும் இந்த நடவடிக்கைகள் மிக அவசியமானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!