தமிழகத்தைக் கலங்கடித்த சிவகங்கை விபத்து... உதவி எண்கள் அறிவிப்பு... ரூ.3 லட்சம் நிவாரணம்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், காரைக்குடி – திருப்பத்தூர் சாலையில் உள்ள கும்மங்குடி கிராமம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்து, தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருப்பூரில் இருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும் நேற்று (நவம்பர் 30) பிற்பகல் கும்பங்குடி பாலம் அருகே எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. பலியானவர்கள்: இந்த விபத்தில் 9 பெண்கள், 2 ஆண்கள் (ஒரு ஓட்டுநர் உட்பட) என மொத்தம் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தோர்: மேலும், 54 நபர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துச் செய்தி அறிந்ததும், காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதற்காக உடனடியாகச் சுகாதாரத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து திருப்பத்தூர், காரைக்குடி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை தேவைப்படும் படுகாயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுச் சிறப்புச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்த தகவல்கள், காயமடைந்தவர்களின் நிலை மற்றும் பிற அவசர உதவிகள் குறித்துப் பொதுமக்கள் தொடர்புகொள்ள வசதியாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அவசர உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது: அவசர உதவி எண்: 04575 – 246233 விபத்தில் சிக்கியவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட எண்ணைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் துயரகரமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு: தலா ரூபாய் மூன்று லட்சம். பலத்த காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு: தலா ரூபாய் ஒரு லட்சம். லேசான காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு: தலா ரூபாய் ஐம்பதாயிரம். இந்த நிவாரணத் தொகை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!