மூடநம்பிக்கையால் பறிபோன 14 வயது சிறுவனின் உயிர்... பாம்பு கடித்த சிறுவனை கங்கை நீரில் மிதக்கவிட்டு கொடூரம்!
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், மூடநம்பிக்கையின் காரணமாக 14 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்த உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சிறுவனை, அவனது பெற்றோர் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் உள்ளூர் மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த மந்திரவாதி, பாம்பு விஷம் இறங்குவதற்காக ஒரு விசித்திரமான மற்றும் ஆபத்தான பரிகாரத்தைக் கூறியுள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட சிறுவனை மூங்கிலால் ஆன மிதவையில் படுக்க வைத்து, கயிறுகளால் கட்டி கங்கை நதியில் 12 மணி நேரம் மூழ்கி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை அப்படியே நம்பிய பெற்றோர், தங்களது மகனை ஆற்றில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
இந்த விசித்திரமான செயலை ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நீண்ட நேரம் ஆற்று நீரில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த சிறுவன் இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தான். பாம்பு நஞ்சு உடலில் பரவியது ஒருபுறம் இருக்க, பல மணி நேரம் நீரில் கட்டி வைக்கப்பட்டதும் அவனது உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு இளம் உயிர், தேவையற்ற மூடநம்பிக்கையால் பலியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது. கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இன்னும் பல கிராமங்களில் இத்தகைய துயரச் சம்பவங்கள் தொடர்வது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!