வாக்காளர் சிறப்பு முகாம் நிறைவு... 14 லட்சம் பேர் நீக்கப்பட்டும் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்!
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய பட்டியலின்படி, மாநிலம் முழுவதும் சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் அதிரடியாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டும் சுமார் 14.25 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.56 லட்சம் மட்டுமே; மற்றவர்கள் அனைவரும் முகவரி மாறியவர்கள் அல்லது தொகுதி மாறியவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் மட்டும் சுமார் 13.45 லட்சம் பேர் மீண்டும் புதிய வாக்காளர்களாகத் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வெறிச்சோடிய சிறப்பு முகாம்கள்: பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் சென்னை மாநகராட்சி சார்பில் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வார்டு அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 3,718 இடங்களில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்திலும் தேர்தல் உதவி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு, படிவங்களை வழங்கத் தயாராக இருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாகப் பொதுமக்கள் இந்த முகாம்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இது மாநகராட்சி அதிகாரிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழிப்புணர்வு இல்லையா? சிறப்பு முகாம்கள் நடைபெற்ற பல இடங்களில் ஒரு மையத்திற்குச் சராசரியாக 25 பேர் மட்டுமே வந்து சென்றதாக அலுவலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவு சென்றடையவில்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கமாக இத்தகைய பணிகளில் ஆர்வம் காட்டும் அரசியல் கட்சியினரும் கூட, இம்முறை புதிய வாக்காளர் சேர்க்கையில் போதிய அக்கறை காட்டவில்லை என்பது கள நிலவரமாக உள்ளது.
இன்றும் ஒரு வாய்ப்பு: முகாம்கள் நடைபெற்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கக் கூட மிகக் குறைந்த அளவிலான மக்களே வந்திருந்தனர். சனிக்கிழமை முகாம்கள் மந்தமாக முடிந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை முழுவதும் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!