"பெண்கள்தான் எப்போதும் பவர் ஹவுஸ்!" - தஞ்சை மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு!
தஞ்சை மண்ணில் இன்று நடைபெற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு, திமுக மகளிரணியின் பலத்தைக் காட்டும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் முக்கியத்துவம் குறித்தும், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மிகக் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தஞ்சை மண்ணின் சிறப்புகளைப் போற்றித் தனது உரையைத் தொடங்கிய முதலமைச்சர், "ராஜராஜ சோழன் ஆட்சி செய்த வீர மண் இது; பெரிய கோயிலும், கல்லணையும் நிலைத்து நிற்கும் தஞ்சை மண் திராவிட இயக்கத்தின் கோட்டை. கலைஞர் மட்டுமல்ல, நானும் ஒரு டெல்டாக்காரன் தான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். திமுக மகளிரணியினர் ஒரு ராணுவப் படையைப் போலத் திரண்டு நிற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் புகழாரம் சூட்டினார்.
திராவிட மாடல் ஆட்சியின் அச்சாணியாகப் பெண்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. பெண்கள்தான் எப்போதும் 'பவர் ஹவுஸாக' (Power House) இருக்கிறார்கள். அதனால்தான் அரசின் திட்டங்களைப் பரப்புரை செய்யும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். வரும் தேர்தல் பரப்புரையின் முன்கள வீராங்கனைகளாக மகளிரணியினர் செயல்பட வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். "தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூச்சமில்லாமல் பொய் பேசிவிட்டுச் சென்றுள்ளார் பிரதமர். ஆனால், உண்மையில் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்பதைத் தரவுகள் சொல்லும்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
பாஜக ஆளும் மாநிலங்களின் நிலையைச் சுட்டிக்காட்டி ஸ்டாலின் ஆக்ரோஷமாகப் பேசினார். "பாஜக ஆளும் மணிப்பூரில் 260 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அங்கு ஏன் இன்னும் பாஜகவால் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை? இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா? மேலும், பாஜக ஆளும் இரண்டு மாநிலங்களில் இருந்துதான் இந்தியா முழுமைக்கும் போதைப்பொருள் விநியோகிக்கப்படுகிறது" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
தஞ்சை மாநாட்டின் மூலம் தேர்தல் பணிகளுக்கான வேகம் திமுகவில் அதிகரித்துள்ளது. பெண்களின் உரிமைகளுக்காகப் பெரியார் உழைத்ததை நினைவு கூர்ந்த முதலமைச்சர், வரவிருக்கும் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு வெற்றியைத் தீர்மானிக்கும் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!