undefined

பிப்.25 முதல் வேலைநிறுத்தம்.. 6.5 லட்சம் லாரிகள் முடங்கும் | பால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் அபாயம்!

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வாகனத் தகுதிச் சான்று (FC) கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பிப்ரவரி 25-ஆம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, தமிழகம் முழுவதும் சுமார் 6.50 லட்சம் லாரிகள் மற்றும் 20 லட்சம் சரக்கு வாகனங்கள் வீதிகளுக்கு வராமல் முடங்கப் போகின்றன.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த டிசம்பர் 2025 முதல் அமல்படுத்தியுள்ள புதிய கட்டண விவரங்கள் லாரி உரிமையாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்பு வாகனத்தின் வயதைப் பொருட்படுத்தாமல் ஆண்டுக்கு சுமார் ரூ.850 மட்டுமே தகுதிச் சான்று கட்டணமாக வசூலிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளுக்கு ரூ.12,500 வரையிலும், 20 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு ரூ.25,000 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது சுமார் 10 முதல் 30 மடங்கு வரையிலான உயர்வு என்பதால், சிறு லாரி உரிமையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறுகின்றனர்.

ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநில அளவிலான போராட்டம் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும்.

அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணாவிட்டால், அடுத்தகட்டமாகப் பால் மற்றும் குடிநீர் விநியோக லாரிகளையும் நிறுத்தப் போவதாக சம்மேளனத் தலைவர் சி. தனராஜ் எச்சரித்துள்ளார். சிமெண்ட், கம்பி மற்றும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் முடங்குவதால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்படும். வெளியூர்களில் இருந்து வரும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் வரத்து குறைந்து, சந்தைகளில் விலை உயர வாய்ப்புள்ளது.

கேரள அரசு இந்தக் கட்டண உயர்வில் 40% வரை சலுகை அளித்துள்ளதைப் போல, தமிழக அரசும் இக்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாகத் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு எட்டப்படாததால் இந்தப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி, அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுப் போராட்டத்தைத் தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!