வலுக்கும் எதிர்ப்பு... ஓடிடி தளத்தில் இருந்து நயன்தாராவின் 'அன்னபூரணி' படம் நீக்கம்!

 

இந்து அமைப்பினரிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், ஓடிடி தளத்தில் இருந்து நயன்தாராவின் 'அன்னபூரணி’ படம் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்து கடந்த டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸான திரைப்படம் ’அன்னபூரணி’. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குநர் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடித்திருந்தார். இது நயன்தாராவின் 75-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் 29-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. ஓடிடியில் வெளியான பின்புதான் இந்தப் படம் கடும் சர்ச்சைகளைச் சந்தித்தது.

’இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது, லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கிறது, ராமபிரானை அவதூறு செய்கிறது’ என்பது உள்ளிட்ட புகார்களைச் சொல்லி நடிகர்கள் நயன்தாரா, ஜெய் மற்றும் ‘அன்னபூரணி’ படத்திற்கு எதிராகவும் அதன் உருவாக்கத்தில் இடம் பெற்றவர்களுக்கு எதிராகவும் காவல்நிலையத்தில் புகாராக கொடுக்கப்பட்டது.

சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரமேஷ் சோலங்கி அளித்துள்ள புகாரில், 'அன்னபூரணி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் இந்தியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் மும்பை காவல்துறை மற்றும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை கோரியிருந்தார்.

இதனையடுத்து, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து, ’அன்னபூரணி’ படத்தை திரும்பப் பெறுவதாக ஜீ நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் இந்த முடிவு எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!