விஜய்க்கு சம்மன்? தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை... இன்று 2-வது நாளாக நீடிக்கிறது!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நேற்று ஆஜரான த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் பிற நிர்வாகிகளிடம் அதிகாரிகள் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
சி.பி.ஐ. அதிகாரி சுனில்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று காலை விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையில் த.வெ.க. நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி. நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களிடம், கூட்டம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியதா அல்லது காலதாமதம் ஏற்பட்டதா?, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டதா?, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் வரக்கூடாது என்று கட்சி சார்பில் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டதா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
நிர்வாகிகள் அளித்த பதில்கள் அனைத்தும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டன. காலை தொடங்கிய இந்த விசாரணை இரவு 7.25 மணி வரை, அதாவது சுமார் 9 மணி நேரம் நீடித்தது.
நிர்வாகிகள் மட்டுமின்றி, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா மற்றும் கூடுதல் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் ஆகியோரும் நேற்று ஆஜராகினர். அவர்களிடம், கூட்டத்திற்கு எத்தனை மணிக்கு அனுமதி வழங்கப்பட்டது? பாதுகாப்புப் பணியில் எத்தனை போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்? நெரிசல் ஏற்பட்டபோது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
நேற்றுடன் விசாரணை முடிவடையாத நிலையில், இன்றும் 2-வது நாளாக விசாரணை நீடிக்கும் என்று தெரிகிறது. இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
தற்போது நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாகத் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!