மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராகிறார் சுநேத்ரா... இன்று பதவியேற்க வாய்ப்பு!
மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவாரின் திடீர் மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுனேத்ரா பவார், மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளார். இன்று ஜனவரி 31ம் தேதி மாலை 5 மணியளவில் மும்பையில் உள்ள ராஜ் பவனில் சுனேத்ரா பவார் துணை முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் பெண் துணை முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் NCP சட்டமன்றக் கட்சி கூட்டத்தில், அவர் முறைப்படி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அஜித் பவார் கவனித்து வந்த ஆயத்தீர்வை மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய பொறுப்புகளை சுனேத்ரா பவார் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை தற்காலிகமாக முதலமைச்சர் வசம் இருக்கலாம்.
மகாராஷ்டிர அரசியலில் 'தாதா' என்று அன்போடு அழைக்கப்பட்ட அஜித் பவார் (66), கடந்த ஜனவரி 28, 2026 (புதன்கிழமை) அன்று நடைபெற்ற கோரமான விமான விபத்தில் காலமானார். மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான பாராமதிக்குச் சென்றபோது, அவர் பயணம் செய்த 'Learjet 45' ரக விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகித் தீப்பற்றியது. இந்த விபத்தில் அஜித் பவார், அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 29 அன்று பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி மற்றும் மூத்த தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அஜித் பவாரின் மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்பவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை (புனே ஜில்லா பரிஷத் - பிப்ரவரி 7) சந்திக்கவும் பவார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தலைமை ஏற்க வேண்டும் என்ற கட்சியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுனேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஜித் பவாரின் மகன் பார்த்த் பவார், தனது தாயார் வகித்து வந்த மாநிலங்களவை எம்பி பதவியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசு, NCP-யின் இந்த முடிவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர அரசியலில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஒரு பெண்ணின் கையில் கட்சியின் மற்றும் ஆட்சியின் முக்கியப் பொறுப்பு ஒப்படைக்கப்படுவது மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!