தேசிய விபத்துகளைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்சநீதிமன்றம் தீவிரம்!
ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் கடந்த மாதம் நிகழ்ந்தக் கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தச் சம்பவத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில், தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க விரும்புவதாக நீதிபதிகள் மகேஷ்வரி மற்றும் விஜய் பிஸ்னோய் அடங்கிய அமர்வு நேற்றுத் தெரிவித்தது.
பலோடி விபத்தில், நெடுஞ்சாலையில் உணவகம் (தாபா) ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் வேன் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளின் இருபுறமும் அமைக்கப்படும் சட்டவிரோத 'தாபா'க்களால் அதிக விபத்துகள் நடப்பதாகக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் மத்தியச் சாலைப்போக்குவரத்து அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "சட்டவிரோதத் தாபாக்களை அகற்றும் அதிகாரம் எங்களிடம் உள்ளது, ஆனால் அந்த அதிகாரம் உள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் அவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். அந்த அதிகாரம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இல்லை. எனவே, நாம் ஒரு தீர்வைக் கண்டறிய வேண்டும்," என்று வாதிட்டார்.
இந்தச் சட்டச் சிக்கல்களைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், பலோடி போன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும், சட்ட விதிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், அவற்றின் அமலாக்கத்தை உறுதி செய்வதற்கும் புதிய வழிகாட்டுதல்களை வகுக்கக் கோர்ட் விரும்புவதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாகச் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கும், கோர்ட் நியமித்திருக்கும் நீதிமன்ற நண்பருக்கும் இடையேக் கலந்துரையாடல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் முடிவுகள், புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு உதவியாக இருக்கும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும், உண்மையான சிக்கலைத் தீர்க்க உதவும் கூகுள் படங்களைச் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்குப் பரிமாறிக் கொள்ளவும் நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!