நோட் பண்ணிக்கோங்க... ஜனவரி 1 முதல் பாசஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புத்தாண்டை முன்னிட்டுத் தமிழகத்தில் இயங்கும் முக்கியப் பாசஞ்சர் ரயில்களின் எண்களை மாற்றித் தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காகவும், ரயில் சேவைகளை முறைப்படுத்தவும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, வரும் 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் மொத்தம் 26 ரயில்கள் புதிய எண்களுடன் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக நெல்லை, திருச்செந்தூர், செங்கோட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்தத் தகவல் மிக அவசியமானதாகும்.
புதிய அறிவிப்பின்படி, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இயங்கும் 56727 என்ற எண் கொண்ட ரயில் இனி 56751 என்ற புதிய எண்ணிலும், 56729 என்ற எண் கொண்ட ரயில் 56753 என்ற எண்ணிலும் இயக்கப்படும். இதேபோல், திருச்செந்தூர் - திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி ரயில்களுக்கான எண்களும் மாற்றப்பட்டுள்ளன. மதுரை - செங்கோட்டை பாசஞ்சர் ரயில் இனி 56771 என்ற புதிய எண்ணில் புறப்படும். இவை தவிர மதுரை - திண்டுக்கல், திருவாரூர் - காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை - திருவாரூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கும் பாசஞ்சர் ரயில்களுக்கும் புதிய எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு முதல் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், குழப்பங்களைத் தவிர்க்கத் தங்களது ரயில் எண்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். NTES (National Train Enquiry System) மற்றும் UTS போன்ற மொபைல் செயலிகள் அல்லது ரயில்வே இணையதளத்தில் இந்த மாற்றங்களைப் பயணிகள் உறுதி செய்து கொள்ளலாம். ரயில் எண்கள் மாறினாலும், அவற்றின் புறப்படும் நேரம் மற்றும் நிறுத்தங்களில் தற்போது எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!