தமிழக மீனவர்கள் கைது... இன்று ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம் - பிரதமர் மோடியைச் சந்திக்க மீனவர்கள் கோரிக்கை!
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது ராமேசுவரம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (டிசம்பர் 24, புதன்கிழமை) ராமேசுவரத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மீனவர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. "எங்கள் உறவினர்களை விடுவிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என்று முழக்கமிட்டவர்களிடம், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதியைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குப் பின் மறியல் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
நேற்று மாலை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி இன்று விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், வரும் 26-ஆம் தேதி ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பாகப் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மீனவர் பிரச்சினையில் ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்காக, வரும் ஜனவரி 13-ஆம் தேதி ராமேசுவரத்திற்கு வருகை தர உள்ள பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துத் தங்களது இன்னல்களை விவரிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். பிரதமரைச் சந்திக்கத் தங்களுக்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தொடர் போராட்டங்கள் மற்றும் பிரதமருடனான சந்திப்பு மீனவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!