ஜனவரி 6 முதல் தமிழகம் ஸ்தம்பிக்கும்... ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது மற்றும் ஊதிய முரண்பாடுகளைக் களைவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததே இந்தப் போராட்ட அறிவிப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், அரசின் செயல்பாடுகள் குறித்துத் தங்களது கடும் அதிருப்தியைப் பதிவு செய்தனர். "கடந்த நான்கரை ஆண்டுகளாக எதைக் கூறி எங்களை அலைக்கழித்தார்களோ, அதையே இன்றும் அமைச்சர்கள் கூறியது வருத்தம் அளிக்கிறது. இது ஒரு பேச்சுவார்த்தை போலவே நடக்கவில்லை; மாறாக மீண்டும் முதலில் இருந்து கோரிக்கைகளைச் சொல்லுங்கள் என்று கேட்பது எங்களை ஏமாற்றும் செயல்" என்று மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஆவேசமாகத் தெரிவித்தார். போராட்டக்களத்தை இந்தச் சந்திப்பு மேலும் சூடாக்கி உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
இந்த அரசு தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற விடாமல் அதிகார வர்க்கம் தடுத்து வருவதாகவும், அரசு நினைத்தால் கூட இந்த அதிகாரிகளின் பிடியில் இருந்து மீள முடியவில்லையா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "நாங்கள் எந்த அரசுக்கும் ஆதரவானவர்களும் அல்ல, எதிரானவர்களும் அல்ல. ஆனால் தேர்தலை முன்னிறுத்தி இந்த முடிவை எடுக்கவில்லை; எங்கள் வாழ்வாதாரத்திற்காகவே போராடுகிறோம்" என்று ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் விளக்கமளித்தார்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்தப் போராட்டம் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, "நாங்கள் பண்டிகை காலங்களில் கூடச் சிறையில் இருந்து போராடியவர்கள் தான். இந்த அரசு எங்களுக்குச் சிறைச்சாலையை அளித்தால், அதையே நாங்கள் பொங்கல் பரிசாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று நிர்வாகிகள் துணிச்சலாகப் பதிலளித்தனர். தமிழக அரசின் ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் நடத்தப்பட்ட இந்த இறுதிச் சந்திப்புத் தோல்வியடைந்தது, வரும் ஜனவரி மாதத்தில் அரசு நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் ஒரு மாபெரும் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!