பயங்கரம்... நடுரோட்டில் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் ஓட ஓட விரட்டிக் கொலை!

 

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகனை முன் விரோதம் காரணமாக மர்ம கும்பல் ஒன்று நடுரோட்டில், உயிருக்கு பயந்து ஓட ஓட  விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஊராட்சி  மன்ற தேர்தலில், போட்டியிடுவது தொடர்பாக மதியழகனுக்கும், மாசிலாமணி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மாசிலாமணியின் தம்பியை மர்ம நபர்கள் கொலைச் செய்த நிலையில், தனது தம்பியின் கொலைக்கு பழிவாங்க மதியழகனைக் கொன்றிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்த மதியழகன்(45). இவரது மனைவி சாந்தி (40), ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இந்நிலையில், இன்று காலை மஞ்சக்குப்பம் பகுதியிலுள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு மதியழகன் நடந்து சென்று கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிளில் மதியழகன் அருகில் வந்தனர்.

மர்ம கும்பல் கைகளில் வீச்சரிவாளைப் பார்த்தவுடன், தன்னைக் கொலைச் செய்ய் வருவதை அறிந்த மதியழகன் வேகமாக ஓட தொடங்கினார். ஆனாலும், துரத்திச் சென்ற மர்ம கும்பல், மதியழகனை சுற்றி வளைத்து நடுரோட்டில் சரமாரியாக வெட்டினர். இதில் மதியழகனின் முகம் முழுவதும் சிதைந்து உருக்குலைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மதியழகனைக் கொலை செய்து விட்டு, வீச்சரிவாளை மதியழகன் முகத்தில் சொருகி விட்டு மர்ம கும்பல் அதே மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். நடுரோட்டில் பரபரப்பான காலை நேரத்தில் ஊராட்சி  மன்ற தலைவர் இப்படி மர்ம கும்பலால் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினார்கள்.

இத்தகவல் கேள்விப்பட்டு மீனவர்கள், பொதுமக்கள், மதியழகனின் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். கொலைச் செய்தவர்கள் 7க்கும் மேற்பட்ட வீச்சரிவாள்களை சம்பவ இடத்தில் வீசி சென்றுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, விசாரணையில் ஈடுபட்டார். மதியழகன் மனைவி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியும், அவரது மகனும் தகவலறிந்து அங்கு வந்து மதியழகன் உடலைப் பார்த்து கதறி துடித்து அழுதனர். 

போலீசாரின் விசாரணையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, மதியழகன் மனைவி சாந்தியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தரப்பினரும் போட்டியிட்டனர். இதில் மதியழகன் மனைவி சாந்தி வெற்றி பெற்றார். அப்போதே மாசிலாமணி தரப்பினர் மதியழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் சாந்தி வெற்றி பெற்றாலும், ஊருக்குச் சென்றால் பாதுகாப்பு கிடையாது என்று வாக்கு எண்ணும் மையத்திலேயே இரவு வரையில் மதியழகன் காத்திருந்துள்ளார். பின்னர் போலீசார் மதியழகனை பாதுகாப்பாக ஊருக்குள் கொண்டு சென்று இரு தரப்பினரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். இருந்த போதும் இவர்களுக்குள் தொடர்ந்து விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மாசிலாமணி தம்பி மதிவாணனை ஒரு கும்பல் வெட்டிக் கொலைச் செய்தனர். தொடர்ந்து படகுகள், வலைகளை எரித்தும், வீடுகள் அடித்தும் நொறுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள மதியழகன் உட்பட பலரை போலீசார் கைது செய்திருந்தனர். மதியழகன் உள்ளிட்டவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தும் மீண்டும் தங்களது ஊருக்கு செல்லவில்லை. இதன் காரணமாக அனைவரும் தங்களது உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தங்கி வந்தனர் என்ற தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

தனது தம்பியைக் கொலைச் செய்த மதியழகனை மாசிலாமணி தரப்பினர் பழிக்குப்பழி வாங்க கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நடந்த இடத்திலும், தாழங்குடா கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்