பிரசித்தி பெற்ற கோட்டையில் பயங்கரம்: சுற்றுலாப் பயணிகள் இடையே திடீர் கூட்டநெரிசல் - 30 பேர் பரிதாப பலி!
கரீபியன் கடலில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் தீவு நாடான ஹைதியில், வார இறுதி நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மிலாட் நகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க லபெரியர் கோட்டையைக் காண ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் நேற்று குவிந்திருந்தனர். பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு கட்டப்பட்ட இந்தப் பாரம்பரிய சின்னத்தில் நடைபெற்ற திருவிழாவில் மக்கள் உற்சாகமாகப் பங்கேற்று வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
மழையில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கி முண்டியடித்துக் கொண்டு ஓடினர். குறுகிய பாதைகளில் ஏற்பட்ட இந்தத் திடீர் தள்ளுமுள்ளு, ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டநெரிசலாக மாறியது. இதில் கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்ததில், பெண்கள் உட்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அங்கு வந்த மீட்புக் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஹைதி நாட்டுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகிழ்ச்சியாகத் தொடங்கிய சுற்றுலாப் பயணம், ஒரு இயற்கைச் சீற்றத்தால் மரண ஓலங்களுடன் முடிந்திருப்பது அந்த நாட்டில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!