முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற மேடையில் பயங்கரம்... பூக்களுக்குள் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு!
நெல்லை மாவட்டத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற விழா மேடையில், கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர், இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ரூ.694 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து, 44 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் தான் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
முதலமைச்சர் வருகை தருவதற்குச் சற்று முன்னதாக, விழா மேடையைத் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. மேடை முழுவதும் விதவிதமான வண்ண ரோஜாக்கள் மற்றும் வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது கண்ணன் என்ற தூய்மைப் பணியாளர் மேடையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பூங்கொத்திற்குள் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு திடீரென அவரது கையைச் சீறியது. பாம்பின் விஷம் ஏறியதால் அவர் வலியால் துடிதுடித்து மேடையிலேயே சரிந்தார்.
பாம்பு கடித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள், உடனடியாகக் கண்ணனை மீட்டு அதே வளாகத்தில் உள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பாம்பு கடித்த கையில் கடும் வீக்கம் ஏற்பட்டதோடு, அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதலமைச்சர் கலந்துகொள்ளும் மிக உயரிய பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஒரு மேடையில், இப்படி ஒரு விஷப் பாம்பு புகுந்தது பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேடையிலிருந்த அனைத்து பூ அலங்காரங்களும் மற்ற பகுதிகளும் அவசரம் அவசரமாக மீண்டும் ஒருமுறை சோதனை செய்யப்பட்டன. முதலமைச்சர் மேடைக்கு வருவதற்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அரசு விழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர் ஒருவரே பாம்பு கடிக்கு ஆளான சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!