கவுண்ட்டவுன் தொடங்கியது... தயார் நிலையில் ஏவுதளம்... நாளை காலை பாய்கிறது இஸ்ரோவின் 'பாகுபலி' ராக்கெட்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உலக அரங்கில் தனது வர்த்தக ரீதியிலான வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கத் தயாராகிவிட்டது. அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான 'புளூபேர்ட்-6' (BlueBird-6) ஏவும் பணிக்கான இறுதிக்கட்ட 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை சரியாக 8:54 மணிக்குத் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இஸ்ரோவின் மிகவும் வலிமையான மற்றும் அதிக எடையைச் சுமந்து செல்லும் திறன்கொண்ட எல்.வி.எம்.3-எம்.6 (LVM3-M6) ராக்கெட், விண்வெளி ஆர்வலர்களால் 'பாகுபலி ராக்கெட்' என்று அன்போடு அழைக்கப்படுகிறது. சுமார் 6.5 டன் (6,500 கிலோ) எடை கொண்ட அமெரிக்காவின் புளூபேர்ட் செயற்கைக்கோளை இது சுமந்து செல்ல உள்ளது. ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இவ்வளவு பிரம்மாண்டமான செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, உலகின் குக்கிராமங்களுக்கும் அதிவேக 5ஜி இணையச் சேவை மற்றும் நேரடி செல்போன் சிக்னல்களை வழங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவுள்ளது.
நாளை காலை 8:54 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. ராக்கெட்டுக்குத் தேவையான திரவ மற்றும் திட எரிபொருள் நிரப்பும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, தற்போது ஏவுதளத்தில் ராக்கெட் கம்பீரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், விண்வெளி மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில், சர்வதேச விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கனவே இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்து, ராக்கெட் வெற்றியடையச் சிறப்புப் பிரார்த்தனை செய்துள்ளனர். நாளை காலை வானத்தைப் பிளந்து கொண்டு இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட் சீறிப்பாயும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண ஒட்டுமொத்த தேசமும் ஆவலோடு காத்திருக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!