பிரதமர் வேலூர் வரும் தேதி திடீர் மாற்றம்... மார்ச் 7-ல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வேலூர் வருகையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தைக் காட்டும் வகையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி முதலில் மார்ச் 6ம் தேதி வேலூர் வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தேதி மாற்றப்பட்டு, மார்ச் 7ம் தேதி அவர் வேலூரில் நடைபெறும் மெகா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கார்த்தியாயினி தெரிவித்துள்ளார்.
பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன், கார்த்தியாயினி மற்றும் மாவட்டத் தலைவர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலழகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வேலூர் கோட்டை மைதானத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேலூர் கோட்டை மைதானம், பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி அல்லது அகரம்சேரி ஆகிய இடங்களில் ஒன்றை இறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சுமார் 1.50 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தியாயினி, "பிரதமர் மோடியின் வேலூர் வருகை என்பது வெறும் அரசியல் நிகழ்வு மட்டுமல்ல, இது வரும் தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் தோன்றுவது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!