undefined

கனவு கலைந்தது... 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

 

துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. பரம எதிரிகளான இரு அணிகளும் மோதிய இந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அதிரடி காட்டியதால், சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கப் போராடிய இந்திய இளம்படையின் கனவு சிதைந்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், இந்தியப் பந்துவீச்சாளர்களின் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிய பாகிஸ்தான் தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸ், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். வெறும் 113 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் 172 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்தார். அவருக்குத் துணையாக அகமது உசைன் 56 ரன்கள் சேர்த்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது.

348 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத் தொடக்கம் தந்தார். வெறும் 10 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்த அவர், சீக்கிரமே ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஆயுஷ் மாத்ரே (2 ரன்கள்), ஆரோன் ஜார்ஜ் (16 ரன்கள்) என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். தீபேஷ் தேவேந்திரன் 36 ரன்களும், கிலன் படேல் 19 ரன்களும் எடுத்துச் சற்றுப் போராடினாலும், மற்ற வீரர்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சைத் தாள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 26.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 191 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த பாகிஸ்தான் அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை உச்சிமுகர்ந்து சாம்பியன் ஆனது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், பேட்டிங்கில் ஏற்பட்ட பலவீனமே இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தத் தோல்வி இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!