பொங்கல் வாழ்த்து அட்டைகளின் பொற்காலம்... காணாமல் போன 'காகித' வசந்தம்... ரூ.3 ஸ்டாம்பும்.. தபால்காரர் வருகையும்!
"ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.." - 90-களில் பிறந்தவர்களுக்கும், அதற்கு முந்தைய தலைமுறையினருக்கும் இந்த வரிகள் வெறும் பாடல் மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஏக்கம். இன்று பொங்கல் வாழ்த்துகள் ஒரு நொடியில் 'வாட்ஸ்-அப்' ஸ்டேட்டஸாக மாறிப்போன நிலையில், காகித வாசத்தோடு வந்த அந்த வாழ்த்து அட்டைகளின் வசந்த காலத்தை அசைபோடுவோம்.
இன்று ஜனவரி 14, 2026. போகிப் பண்டிகை புகையோடு விடிந்தாலும், பழைய நினைவுகளின் புகைமூட்டம் நம் மனதை 20 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. இன்று ஸ்மார்ட்போனில் 'Forward' செய்யப்படும் வாழ்த்துகளுக்கு இடையில், அன்று நாம் கைகளால் எழுதி அனுப்பிய வாழ்த்து அட்டைகள் ஒரு தனிப் பேரரசு.
இன்று கொரியர் வருபவர்களைக் கூடக் கதவைத் திறக்காமல் பார்க்கும் காலமிது. ஆனால் அன்று, காக்கி உடை அணிந்து சைக்கிளில் வரும் தபால்காரர் தான் ஊரின் மிகப்பெரிய 'விஐபி'. "சார்.. எனக்கு ஏதும் தபால் இருக்கா?" என்ற கேள்வியும், அவர் பையைத் துழாவி எடுத்துத் தரும் அந்த வண்ணமயமான அட்டையும் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. தபால்காரர் ஒரு தெருவிற்குள் நுழைந்தாலே அது ஒரு திருவிழா கோலம் தான்.
பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கடத்தெருக்களில் வாழ்த்து அட்டை கடைகள் முளைத்துவிடும். பொங்கல் பானை, கரும்பு, மாட்டு வண்டி, கிராமத்துச் சிறுவர்கள் விளையாடும் படங்கள் என அட்டைகள் கண்ணைப் பறிக்கும். ரஜினி, கமல் எனப் பிடித்த நடிகர்களின் படங்கள் போட்ட அட்டைகளை வாங்கி, அதில் "இப்படிக்கு உன் அன்பு நண்பன்" எனப் பிழையோடு எழுதி அனுப்பிய அந்தத் தருணங்கள் தனி அழகு.
இன்று 'Double Tick' விழுந்தால் வாழ்த்து சேர்ந்துவிட்டது என்று அர்த்தம். ஆனால் அன்று: அட்டை வாங்குதல் மற்றும் எழுதுதல். ரூ.3 ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் போடுதல். தபால் நிலையத்தில் 'சீல்' குத்தி, ஊர் பிரித்து, அந்த ஊர் தபால்காரர் கைக்குச் செல்ல 3 நாட்கள் ஆகும். இந்தக் காத்திருப்பில் ஒரு சுகம் இருந்தது. அந்த அட்டையைப் பிரித்துப் பார்க்கும் போது வரும் அந்த அச்சு மை வாசம், அனுப்பியவரின் நேசத்தைப் பறைசாற்றும். பல வீடுகளில் இந்த அட்டைகளைப் பீரோ கண்ணாடியில் அல்லது புகைப்பட ஆல்பங்களில் பொக்கிஷமாகப் பாதுகாத்தார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!