undefined

ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.. சென்னை - மதுரை, கோவை செல்ல புதிய கட்டணங்கள் எவ்வளவு?!

 

தமிழகத்தில் ரயில் பயணம் மேற்கொள்வோருக்கு இன்று ஒரு கசப்பான செய்தி காத்திருக்கிறது. இந்திய ரயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் ரயில் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய கட்டண உயர்வு இன்று (டிசம்பர் 26, 2025) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே இந்தக் கட்டண உயர்வு பொருந்தும். ஏசி (AC) பெட்டிகள் மற்றும் ஏசி அல்லாத முன்பதிவு (Sleeper) பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவில்லாத சாதாரண (General) பெட்டிகளில் 215 கி.மீ-க்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 215 கிலோ மீட்டருக்கும் குறைவாகப் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது ஒரு சிறிய ஆறுதல்.

சென்னை - மதுரை, கோவை செல்ல இனி எவ்வளவு செலவாகும்?

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களில் கட்டணம் எந்த அளவில் உயரும் என்பது குறித்த ஒரு கணக்கீடு. சென்னை டூ மதுரை (493 கி.மீ). நீங்கள் சென்னையிலிருந்து மதுரைக்கு ஏசி அல்லது ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்தால், அடிப்படை கட்டணத்தில் சுமார் 10 ரூபாய் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். சாதாரணப் பெட்டியில் செல்பவர்களுக்கு சுமார் 5 ரூபாய் வரை உயரும்.

சென்னை டூ கோவை (497 கி.மீ). கோவை செல்லும் பயணிகளுக்கும் இதே நிலைதான். ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு சுமார் 10 ரூபாயும், சாதாரண வகுப்புப் பயணிகளுக்கு சுமார் 5 ரூபாயும் அடிப்படை கட்டணத்துடன் கூடுதலாகச் சேரும். இதனுடன் ஜிஎஸ்டி மற்றும் இதர கட்டணங்களும் கணக்கிடப்படும்.

யாருக்கெல்லாம் இந்த உயர்வு கிடையாது?

தினசரி வேலைக்குச் செல்லும் சாமானிய மக்களைக் கருத்தில் கொண்டு, புறநகர் மின்சார ரயில்கள் (Suburban Trains) மற்றும் சீசன் டிக்கெட் (Season Tickets) கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், நேற்று (டிசம்பர் 25) வரை டிக்கெட் முன்பதிவு செய்தவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.

ஒரே ஆண்டில் இரண்டாவது முறை - பயணிகள் அதிருப்தி!

ரயில்வே துறைக்கு வரும் மார்ச் 2026-க்குள் கூடுதலாக 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஜூலை மாதம் தான் ஒருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாகக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் குடும்பத்துடன் ஊருக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பது உறுதி.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!