வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த சிறுத்தை ...!
மலைகளின் அரசியான ஊட்டியில், சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் சிறுத்தை மற்றும் கரடி என இரண்டு வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில், நள்ளிரவு நேரத்தில் பதுங்கி வந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த ஒரு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு திடீரென உள்ளே புகுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அலறல் சத்தம் போடவே, சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. ஜன்னல் உடைந்த சத்தத்திலும், சிறுத்தையின் உருமலைக் கேட்ட குடும்பத்தினர் தற்போது பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஒருபுறம் இருக்க, ஊட்டி - குன்னூர் பிரதான சாலையோரத்தில் கரடி ஒன்று மிகவும் நிதானமாகப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காட்சி வாகன ஓட்டிகளை அதிர வைத்தது. சாலையைக் கடக்க முயன்ற கரடி, வாகனங்களின் நடமாட்டத்தைப் பார்த்தவுடன் அசால்ட்டாகச் சாலையோரத்திலேயே அமர்ந்து கொண்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் வரை அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
கோடை சீசன் தொடங்கிவிட்ட நிலையில், வனப்பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாகத் தண்ணீர் மற்றும் உணவைத் தேடிச் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதாகக் கூறப்படுகிறது. "மாலை நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" எனவும், "கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்" எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்தடுத்து நடக்கும் இந்த வனவிலங்கு ஊடுருவல்கள் ஊட்டியில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!