“வீட்ல ஒத்த ரூபா இல்லை... எதுக்குடா இத்தனை கேமரா?”.. 4 பக்கம் கடிதம் எழுதி விட்டுச் சென்ற திருடன்!
திருநெல்வேலியில் உள்ள ஒரு வீட்டில் திருடச் சென்ற மர்ம நபர், அங்கு ஒரு ரூபாய் பணம் கூட இல்லாததால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார். தனது ஏமாற்றத்தைக் கோபத்துடன் வெளிப்படுத்தும் விதமாக, வீட்டின் உரிமையாளருக்கு நான்கு பக்கங்களில் நீளமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், வினோதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி பழைய பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். இவர் தன்னுடைய மகளைப் பார்ப்பதற்காகக் குடும்பத்துடன் சில நாட்கள் மதுரைக்குச் சென்றிருந்தார். வீட்டைப் பூட்டிச் சென்ற இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் ஒருவர், ஜேம்ஸ் பாலின் வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.
வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த பீரோவைத் திறப்பதற்காக உடைத்து, உள்ளே நகை அல்லது பணம் ஏதேனும் இருக்கிறதா என்று தீவிரமாகத் தேடிப் பார்த்துள்ளார். ஆனால், பீரோவைச் சோதனை செய்தபோது அவர் எதிர்பார்த்தபடி ஒரு ரூபாய் ரொக்கப் பணம் கூட இல்லை. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த அந்தத் திருடன், அங்கு கிடந்த சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உண்டியல் ஒன்றை மட்டுமே திருடிக்கொண்டு சென்றுள்ளார்.
இவ்வளவு சிரமப்பட்டு வந்து, வீட்டில் எந்தப் பணமும் நகையும் இல்லாததால் ஆத்திரமடைந்த அந்தத் திருடன், கடைசியாக வீட்டின் உரிமையாளருக்குத் தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, நான்கு பக்கங்களைக்கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அந்தக் கடிதத்தில் அந்த மர்ம நபர், "வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை என்னைப் போல யாரும் திருட வந்தால் ஏமாற வேண்டாம், தயவுசெய்து காசு வைக்கவும். எதற்கு இத்தனை சிசிடிவி கேமராக்கள் வைத்திருக்கிறீர்கள்? போங்கடா வெண்ணைகளா! என்னை மன்னித்து விடுங்கள்... இப்படிக்கு திருடன்" என்று எழுதியிருந்தார்.
கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். தனது கோபத்தை வெளிப்படுத்திய திருடன், அத்துடன் திருட்டுச் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கக்கூடிய சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளான். மகளைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ஜேம்ஸ் பால், வீடு உடைக்கப்பட்டு, பீரோ திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பணம் எதுவும் திருடு போகவில்லை என்றாலும், பீரோ உடைக்கப்பட்டு, அங்கு நான்கு பக்கக் கடிதம் இருப்பதைக் கண்டார்.
இந்த வினோதச் சம்பவம் குறித்து ஜேம்ஸ் பால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த மர்ம திருடனைக் கண்டுபிடிப்பதற்காகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றிருந்தாலும், அந்தத் திருடனின் கையெழுத்து மற்றும் அவனது செயல் குறித்த தகவல்களை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!