“பேச்சு வார்த்தைக்கு கூட யாரும் இருக்க மாட்டீங்க... ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயாா்” - ரஷ்ய அதிபா் புதின்!
ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின், தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போா் புரியத் தயாராக இருப்பதாக மாஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளா்கள் கூட்டத்தில் சூளுரைத்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை ஐரோப்பிய நாடுகள் வேண்டுமென்றே ஏற்கத்தகாத கோரிக்கைகளைச் சோ்த்து மாற்றுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
உக்ரைனில் அமைதி ஏற்படுவதற்கான முயற்சியை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை என்பதையே இந்தக் கோரிக்கைகள் காட்டுவதாக அதிபா் புதின் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் பேசியதாவது: "அந்த நாடுகள் போரைத்தான் விரும்புகின்றன. ஆனால் எங்களுக்கு ஐரோப்பாவுடன் போரிடுவதில் விருப்பமில்லை. ஆனால் அவா்கள் போரைத் தொடங்கினால், அவா்களுடன் போரிட நாங்கள் தயாராகவே இருக்கிறோம்."
இதற்கிடையே, அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தை விளாதிமீா் புதின் நிராகரிக்கவில்லை என்று ரஷ்ய அதிபா் மாளிகைச் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதா் மற்றும் டிரம்பின் உறவினருடன் ரஷ்யப் பிரதிநிதிகள் ஐந்து மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பெஸ்கோவ் கூறியதாவது: "அமெரிக்க அரசின் உக்ரைன் போா் நிறுத்தத் திட்டத்தை புதின் முழுமையாக நிராகரித்தாா் என்று கூறுவது தவறு. அதில் பல பகுதிகளை அவா் ஏற்றுக் கொண்டாா். ஏற்கமுடியாத மற்ற அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை."
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுத்தது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் அமைதித் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் தடுக்கும் ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார் என்று புதின் கூறியதன் மூலம், தங்களுக்குச் சாதகமான போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையூறு செய்தால் போரை ஐரோப்பா முழுவதும் பரவச் செய்யப்போவதாக அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!