திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து அமைப்பினர் 13 பேர் கைது; 144 தடை உத்தரவு அமல்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில், இந்து அமைப்பினர் புதன்கிழமை மலை மீது ஏற முயன்றபோது காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 13 பேரை கைது செய்துள்ளனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம. ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை மாலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிற்பகலில் தீபம் ஏற்றுவதற்கான பொருள்கள் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், மாலை 4 மணி அளவில் பொருள்கள் அனைத்தும் மீண்டும் கீழே இறக்கப்பட்டன. மாலை 6.05 மணி அளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்றப்பட்டது.
உத்தரவை மீறி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் மலைப் பாதை அருகே திரண்டனர். காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளைத் தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றபோது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரு காவலர்கள், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் சிவலிங்கம், நிர்வாகி ராக்கப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து அமைப்புகளைச் சேர்ந்த 15 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் மதுரை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, 13 பேரைக் கைது செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைக் கருத்தில் கொண்டு, திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் அறிவித்தார்.
இதனிடையே, மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாதது குறித்து இந்து அமைப்பைச் சேர்ந்த ராம. ரவிக்குமார், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் மீண்டும் முறையிட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி, சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதைக் காரணம் காட்டி, மலையில் ஏற அனுமதிக்க முடியாது என்று மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் இதில் தீர்வு எட்டப்படவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!