திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் கோடைக்கால விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். இதனால், எவ்வித முன்னனுமதி சீட்டும் இன்றி இலவச தரிசனத்திற்காக (சர்வதரிசனம்) காத்திருக்கும் பக்தர்களின் வரிசை வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அறைகளையும் தாண்டி, வெளிப்பகுதிகளில் நீண்ட தூரத்திற்கு நீண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, டோக்கன் இல்லாத பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக, முன்னரே நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட (SSD) டோக்கன்களைப் பெற்ற பக்தர்கள் மட்டுமே குறித்த நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய டோக்கன்கள் வைத்திருப்பவர்களுக்கு 4 முதல் 6 மணி நேரத்திற்குள் தரிசனம் கிடைப்பதாகவும், எவ்வித டோக்கனும் இல்லாதவர்களுக்கே காத்திருப்பு காலம் மிக அதிகமாக உள்ளதாகவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்படும் இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்களைப் பெறவும் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.
பக்தர்களின் வசதிக்காகக் காத்திருப்பு அறைகளில் குடிநீர், பால் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தேவஸ்தானம் சார்பில் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், வெயிலின் தாக்கம் மற்றும் நீண்ட நேரக் காத்திருப்பு காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தரிசன வரிசையில் ஏற்படும் கூட்டத்தைக் குறைக்கும் பொருட்டு, விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்ட சில சிறப்பு தரிசனங்களில் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் நிலவரத்தை அறிந்து திட்டமிட்டு வருமாறும், உரிய ஆவணங்களுடன் தரிசன டோக்கன்களைப் பெற்றுச் செல்லுமாறும் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!