தினம் ஒரு திருப்பாவை .... பாசுரம் 18...!
மார்கழி 18... தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
தாள் திறவாய் நப்பின்னையே
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் ஒருபோதும் பின்வாங்காத தோள்வலிமை கொண்டவனுமான நந்தகோபனின் மருமகளே நப்பின்னை பிராட்டியே. வாசனை சிந்தும் கூந்தலால் உலகையே மயக்கும் அழகியவளே. உன் வாசல் கதவைத் திறந்து அருள் புரிய வேண்டும் என ஆண்டாள் அழைக்கிறாள்.
கோழிகளின் கூவல் நாலாபுறமும் ஒலிக்கிறது. குருக்கத்திக் கொடிகளில் அமர்ந்த குயில்கள் இனிய குரலில் பாடத் தொடங்கிவிட்டன. காலையெனும் பக்தி நேரம் வந்துவிட்டது என்பதை இயற்கையே அறிவிக்கிறது.
பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே, உன் கணவனின் புகழ் பாடவே நாங்கள் வந்தோம். வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் வாசல் கவைத் திறந்தால் போதும். அந்த ஒரு தரிசனமே எங்கள் உள்ளத்தை நிறைக்கும் பேரானந்தமாக மாறும்.
பெருமாள் கோயிலில் முதலில் தாயாரை சேவிக்க வேண்டும் என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல; அது கருணையின் வழி. நாராயணன் நீதியின் வடிவம். தர்மம், விதி, கர்மம் எல்லாவற்றையும் கணக்கில் வைத்து தான் அருள் வழங்குவான். ஆனால் தாயார் கருணையின் வடிவம். கணக்கும் இல்லை, காரணமும் இல்லை. பாவமும், தகுதியும் பார்க்காமல் இரக்கம் பொழிபவள்.
வீட்டில் அம்மா–அப்பா உறவு போலத்தான் இது. அப்பாவிடம் நேரடியாக கேட்டால் “படிச்சாச்சா? வேலை முடிஞ்சாச்சா?” என்று கேள்விகள் வரும். அம்மாவிடம் சொன்னால், அவள் புன்னகையுடன் “நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி அப்பாவிடமே நம் கோரிக்கையை நிறைவேற்றி விடுவாள். அந்த இடைச்செயல்தான் தாயாரின் பெருமை.
அதனால்தான் வைணவத்தில் புருஷகாரம் என்ற தத்துவம் முக்கியம். நம் வேண்டுகோளை நாராயணனிடம் கொண்டு செல்வதற்கான கருணை பாலம் தாயார். நரசிம்மரின் உக்கிரத்தையே தணித்தவள் என்றால், சாதாரண ஜீவர்களின் துயரங்களை எவ்வளவு எளிதாக கரைத்து விடுவாள்!
திருப்பாவையில் பாவை நோன்பு செய்யும் பெண்கள் முதலில் நப்பின்னையை எழுப்புவது இதற்காகத்தான். தாயாரை எழுப்பினால் கண்ணன் தானாக எழுந்து வருவான். கருணையை முன்வைத்து அருளைப் பெறுவது தான் அந்த பாடல்களின் உள்ளார்ந்த ரகசியம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!