தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் கைதானவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்ட நபர், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஒரு வாரமாகத் தலைமறைவாக இருந்த தர்ம முனீஸ்வரன் (38) என்பவரைத் தனிப்படை போலீசார் நேற்று (மார்ச் 19) அதிரடியாகக் கைது செய்தனர். கைதான அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில், அவருக்குத் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கைதான நபர் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது ஏற்கனவே இருந்த உடல்நல பாதிப்பா என்பது குறித்து போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், மருத்துவமனையைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குற்றவாளி பிடிபட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த உடல்நலக்குறைவு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் தாமதத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், அவர் குணமடைந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!