நாளை முதல் திருப்பூர் எலாஸ்டிக் தொழிலில் 50% உற்பத்தி குறைப்பு... 25ம் தேதி முதல் முழுமையாக நிறுத்தம்!
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று அவினாசி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எலாஸ்டிக் தொழில் சந்தித்து வரும் கடுமையான சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, எலாஸ்டிக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது இந்தத் தொழிலைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் கோவிந்தசாமி, "நூல் விலை சுமார் 35 சதவீதமும், ரப்பர் விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, பாலியஸ்டர் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 'ஓவன் எலாஸ்டிக்' தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கலர் டைஸ் தட்டுப்பாடும், சிலிண்டர் தட்டுப்பாட்டால் 'ஹீட் செட்டிங்' பணிகளை மேற்கொள்ள முடியாத சூழலும் நிலவுகிறது. இந்த நெருக்கடியால் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது," என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, நாளை முதல் எலாஸ்டிக் உற்பத்தியை 50 சதவீதம் குறைக்கச் சங்க உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், வரும் மார்ச் 25-ஆம் தேதி முதல் எலாஸ்டிக் உற்பத்தியை முழுமையாக நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வை ஈடுகட்ட, நாளை முதல் எலாஸ்டிக் விலையை 25 சதவீதம் உயர்த்தவும் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். திருப்பூரின் மிக முக்கியமான உபதொழில்களில் ஒன்றான எலாஸ்டிக் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது ஒட்டுமொத்தப் பின்னலாடைத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!