பாக்ஸ் ஆபீஸ் வேட்டை: 2025-ல் கல்லா கட்டிய டாப்-10 தமிழ் படங்கள்... முதலிடத்தில் 'தலைவர்'!
2025-ம் ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமா சந்தித்த லாப-நஷ்ட கணக்குகள் வெளியாகியுள்ளன. ரஜினி, அஜித் போன்ற சீனியர் நடிகர்கள் ஒருபுறம் மிரட்ட, பிரதீப் ரங்கநாதன் போன்ற இளம் ரத்தங்கள் மறுபுறம் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். உலக அளவில் அதிக வசூல் செய்த டாப்-10 படங்கள் இதோ:
1) வசூல் சக்கரவர்த்தி ரஜினியின் 'கூலி':
சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்தும் ரஜினியின் மகுடம் இன்னும் இறங்கவில்லை. லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் வெளியான 'கூலி', கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூலில் 'ருத்ரதாண்டவம்' ஆடியது. உலக அளவில் 518 கோடி ரூபாய் அள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2) அஜித்தின் அதிரடி 'குட் பேட் அக்லி':
இந்த ஆண்டு விஜய் படங்கள் எதுவும் இல்லாத நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் தீனி போட்டது அஜித்தின் 'குட் பேட் அக்லி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பழைய ரெபரன்ஸ்களுடன் வந்த இப்படம் 248.25 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியுள்ளது.
3) இளம் 'டிராகன்' பிரதீப்:
சின்ன பட்ஜெட் படமாக தொடங்கி பெரிய வசூல் பார்த்த படம் 'டிராகன்'. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான இப்படம் வெறும் 37 கோடியில் எடுக்கப்பட்டு, உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
4) நீண்ட கால போராட்டத்திற்குப் பின் 'விடா முயற்சி':
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் - திரிஷா நடிப்பில் உருவான இப்படம் பிப்ரவரி மாதம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபடி 138 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது.
5) ஹாட்ரிக் அடித்த 'டியூட்':
தீபாவளி விருந்தாக வந்த 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு கூட்டணி ரசிகர்களை கவர்ந்தது. இதன் மூலம் 100 கோடி கிளப்பில் நுழைந்த பிரதீப், 113 கோடி ரூபாய் வசூலுடன் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார்.
6) ஏமாற்றியதா 'மதராசி'?:
அமரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் 'மதராசி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும், 99.12 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது.
7) 'ரெட்ரோ' கொடுத்த நிம்மதி:
கங்குவாவின் சறுக்கலுக்குப் பிறகு சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் தப்பிப் பிழைத்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், உலக அளவில் 97.35 கோடி ரூபாய் வசூலித்து 7-வது இடத்தைப் பிடித்தது.
8) பட்ஜெட் கம்மி.. வசூல் அதிகம்.. 'டூரிஸ்ட் பேமிலி':
சசிகுமார் - சிம்ரன் நடிப்பில் ஒரு முழு நீள குடும்பத் திரைப்படமாக வந்த இப்படம் 2025-ன் "பிளாக்பஸ்டர்". வெறும் 7 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் 86 கோடி ரூபாய் வசூலித்து தயாரிப்பாளருக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது.
9) பாசப் போராட்டத்தில் 'தலைவன் தலைவி':
விஜய்சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணியில் ஜூலை மாதம் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு 85 கோடி ரூபாய் வசூல் செய்தது.
10) மனதை வென்ற 'மாமன்':
சூரி - ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான 'மாமன்' திரைப்படம் மாமன்-மருமகன் பாசத்தை அழகாகப் பேசியது. உணர்வுப்பூர்வமான கதையம்சம் கொண்ட இப்படம் 41.15 கோடி ரூபாய் வசூலித்து டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
முக்கியக் குறிப்பு: இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வசூல் விபரங்கள் தயாரிப்பு தரப்பு மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட தோராயமான தகவல்கள் ஆகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!