தமிழகத்தில் சோகம்... குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம், மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி விடுமுறை என்பதால் வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க நண்பர்களான பார்த்திபன் (13), நித்தீஷ் (14) மற்றும் மற்றொரு நித்தீஷ் (13) ஆகிய 3 பேரும் ஏரிக்குச் குளிப்பதற்காக சென்றிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில், சிக்கிக் கொண்டனர். கரையில் இருந்தவர்கள் சத்தம் போட்டும், சிறுவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூன்று சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மணியம்பட்டு கிராமத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்குச் செல்லும் போது சிறுவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விளையாடச் சென்ற பிள்ளைகள் சடலமாகத் திரும்பியதைக் கண்டு அவர்களது குடும்பத்தினர் கதறித் துடிப்பது காண்போரை கலங்கச் செய்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!