திருப்பூரில் துயரம்... பள்ளி வகுப்பறையில் 7-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு - பெற்றோர்கள் குற்றச்சாட்டு!
திருப்பூர் கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மதியம், 7ம் வகுப்பு மாணவன், வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தண்ட கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த முரளி - மணிமேகலை தம்பதியின் மகன் தீபக் (12). இவர் அப்பகுதியில் உள்ள கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவேளை முடிந்து தண்ணீர் குடித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பிய தீபக், திடீரென மூக்கில் நுரை தள்ளிய நிலையில் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். மயக்கமடைந்து சரிந்து கீழே விழுந்த மாணவனைப் பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
மாணவனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்: ஆசிரியர்கள் மாணவனை அடித்ததால் தான் அவன் உயிரிழந்திருக்கக் கூடும் எனப் பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவன் மயங்கி விழுந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் காலதாமதம் செய்ததே உயிரிழப்புக்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, மாணவன் மாரடைப்பு அல்லது உடல்நலக் குறைவால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது உறுதியாகத் தெரியவரும் என்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!