முதன்முறையாக ரஷ்யாவின் எண்ணெய் களம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்!
மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ரஷ்யா-உக்ரைன் போரில், உக்ரைன் தற்போது தனது தாக்குதலின் இலக்கை புதிய கடற்பகுதிக்கு விரிவுபடுத்தியுள்ளது. ரஷ்யாவின் முக்கிய நிதி ஆதாரமான எண்ணெய் வளங்களை இலக்கு வைத்து, முதன்முறையாக காஸ்பியன் கடலில் அமைந்துள்ள ரஷ்யாவின் எண்ணெய் களம் மீது டிரோன் உதவியுடன் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
கருங்கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள் மற்றும் தளவாடங்கள் மீது உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ரஷ்யாவின் 3 எண்ணெய் கப்பல்கள் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் போக்குவரத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த கப்பல்கள் செயல்பாட்டை முழுவதுமாக நிறுத்திவிட்டதாகவும் உக்ரைன் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தாக்குதல்கள் குறித்துக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனை கடலில் இருந்து துண்டித்து விடுவதே இத்தகைய தாக்குதல்களை நிறுத்துவதற்கான வழி என்றும், உக்ரைனுக்கு ஆதரவு தரும் நாடுகளின் கப்பல்கள் மீது பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்தத் தொடர் தாக்குதலின் அடுத்த கட்டமாக, உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பு முதன்முறையாக காஸ்பியன் கடலில் உள்ள ரஷ்யாவின் எண்ணெய் களம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டு விளாடிமிர் புதினால் தொடங்கி வைக்கப்பட்ட பிளநோவ்ஸ்கி எண்ணெய் களம் ஆகும். இந்த எண்ணெய் களம் உக்ரைனின் 4 டிரோன்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் தளத்தின் எண்ணெய் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
காஸ்பியன் கடல், உக்ரைனின் நெருங்கிய எல்லையில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வளவு தொலைவில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது ரஷ்யாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு நிதி அளிக்கக்கூடிய எண்ணெய் வளங்கள் கொண்ட அமைப்புகளை இலக்காகக் கொண்டு, இந்த ஆண்டு உக்ரைன் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் மூலம் ரஷ்யாவுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்தி, உக்ரைன் மீதான தாக்குதல்களை நிறுத்தச் செய்வதே தங்கள் இலக்கு என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. காஸ்பியன் கடல் பகுதியில் உள்ள ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் தளங்கள் தாக்கப்பட்டபோதும், ரஷ்யா உடனடியாக இதற்கு எந்தப் பதிலடியும் தரவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!