இந்தியா முழுவதும் 40% பட்டதாரிகளுக்கு வேலையில்ல... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை! 

 

இந்தியாவில் உயர்கல்வி கற்றுப் பட்டம் பெற்ற இளைஞர்களில் சுமார் 40 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருவதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 6.3 கோடி பட்டதாரிகளில், சுமார் 1.1 கோடி பேர் தகுதியான வேலை கிடைக்காமல் போராடி வருகின்றனர். உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தாலும், அவர்களுக்குத் தேவையான அளவிற்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததே இந்நிலைக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த 2004 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் இளைஞர்கள் பட்டதாரிகளாக உருவான போதிலும், அவர்களில் வெறும் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதேபோல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, குறைந்த ஊதியத்தில் முறைசாரா பணிகளுக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் 58 சதவீதமாக இருந்த இந்தப் போக்கு, 2023-இல் 72 சதவீதமாக உயர்ந்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது.

ஊதிய விகிதத்தைப் பொறுத்தவரை, கல்வி கற்காதவர்களை விடப் பட்டதாரிகளின் தொடக்க கால ஊதியம் அதிகமாக இருந்தாலும், அண்மைக்காலமாக இளம் ஆண் பட்டதாரிகளுக்கான ஊதிய உயர்வு வேகம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், பணியிடங்களில் நிலவி வந்த ஆண்-பெண் ஊதியப் பாகுபாடு கணிசமாகக் குறைந்து வருவது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. திறமையான இளைஞர்களுக்குத் தகுதியான மற்றும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதே அரசின் முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும் என அந்த ஆய்வு அறிக்கை வலியுறுத்துகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!