இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (டிசம்பர் 15) தமிழகம் வருகிறார். வேலூரில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் அவர் கட்சி அமைப்பு ரீதியான ஆலோசனையில் ஈடுபடுவதுடன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியையும் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி விரிவாக்கம் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில், ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை இணைக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. சமீபத்திய சந்திப்புகள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாமிட்டு, தேசியத் தலைவர்களுடன் ஆலோசித்து வந்தார். மேலும், அவர் அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து, கூட்டணி விவகாரம், தொகுதிப் பங்கீடு குறித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக நிலைப்பாடு: "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை பழனிசாமி தான் தாங்குவார்; கூட்டணி குறித்து அவர்தான் முடிவெடுப்பார்" என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
பழனிசாமியைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், டெல்லி சென்று அமித் ஷாவுடன் கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள், தொகுதிப் பங்கீடு, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்திய பின்னர், அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வருகிறார்.
வேலூரில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் கட்சி அமைப்பு ரீதியான ஆலோசனையில் ஈடுபடுகிறார். தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது, அவர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியையும் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நாளை (டிசம்பர் 16) ராணிப்பேட்டையில் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நடைபெற உள்ள நிலையில், இன்று வேலூரில் அமித் ஷா நடத்தும் ஆலோசனைக்குப் பிறகு, கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!