மேலும் 2 புதிய யுரேனியம் சுரங்கங்களுக்கு அனுமதி... மத்திய அரசு அதிரடி!
இந்தியாவின் அணுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், நாட்டில் புதிதாக இரண்டு இடங்களில் யுரேனியம் சுரங்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் சிகர் மாவட்டம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஜ்வால் மாவட்டம் ஆகிய இரண்டு இடங்களில், நாளொன்றுக்கு 2,500 டன் தாதுக்களைக் கையாளும் திறன் கொண்ட பிரம்மாண்ட சுரங்கங்கள் அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சுரங்கங்களை அமைப்பதற்கான சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறும் பணிகள் தற்போது பல்வேறு நிலைகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உள்நாட்டிலேயே யுரேனியத்தை அகழ்ந்தெடுக்கும் திறனை அதிகரிப்பதற்காக, இந்திய யுரேனியம் கழகம் (யுசிஐஎல்) என்ற பொதுத்துறை நிறுவனம் இதற்கான முழுவீச்சிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் இலக்கின் ஒரு பகுதியாக, இந்த எரிசக்தித் திட்டங்கள் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன.
தற்போது ஆந்திரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மட்டுமே யுரேனியம் சுரங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய சுரங்கங்களின் வருகை இந்தியாவின் அணு மின் உற்பத்திக்கு பெரும் வலுசேர்க்கும். அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் யுரேனியம் தட்டுப்பாடின்றி கிடைத்தால், நாட்டின் மின்சாரத் தேவையை எளிதாகச் சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாவதுடன், அணுசக்தித் துறையில் இந்தியா சுயசார்பு அடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!