இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - பயன்படுத்திக்கோங்க!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பெயர் விடுபட்டவர்கள் அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களுக்காகச் சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் (டிசம்பர் 20), நாளையும் (டிசம்பர் 21) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லை என்றாலோ, அல்லது உங்கள் முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெயர் இல்லாதவர்கள் 'படிவம் 6'-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த முறை ஒரு புதிய மாற்றமாக, பெயர் சேர்க்க விரும்புபவர்கள் உறுதிமொழி படிவம் ஒன்றையும் அளிக்க வேண்டும். அதில் கடந்த 2002 அல்லது 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற உங்களது அல்லது உங்கள் பெற்றோரின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அந்தத் தகவல்கள் சரியாக இல்லாத பட்சத்தில், முறையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம். கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், பெயர் சேர்க்கைக்கான ஆவணமாக 'ஆதார்' ஏற்றுக்கொள்ளப்படாது.
பெயர் நீக்கம் அல்லது திருத்தங்களுக்கு 'படிவம் 8'-ஐ பயன்படுத்த வேண்டும். இந்த முகாம்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாகப் படிவங்களைப் பெற்றுக்கொள்வார்கள். முகாமுக்குச் செல்ல முடியாதவர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINET செயலி அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனிலும் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். வரும் ஜனவரி மாதம் 18-ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நீடிக்கும் என்றாலும், இந்த வார இறுதி முகாம்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் எளிதாகத் தங்களது ஜனநாயகக் கடமையை உறுதி செய்து கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று, பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!