வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவன் மயங்கி சரிந்து பலி... தொடரும் சோகம்!
தர்மபுரியிலிருந்து கோவைக்கு வந்து டி.பார்ம் படித்து வந்த மாணவன் முகேஷ்குமார், நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலையேறத் தொடங்கியுள்ளார். சிவனை தரிசிக்க வேண்டும் என்கிற ஆசையில் உற்சாகமாகப் பயணத்தைத் தொடங்கிய அந்த இளைஞனுக்கு, ஐந்தாவது மலையே எமன் வருவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இன்று அதிகாலை 5-வது மலையில் ஏறிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அந்த மாணவன் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளான்.
உடனடியாக அங்கிருந்த வனத்துறையினர் ஓடோடி வந்து, டோலி மூலம் அந்த மாணவனை மீட்டு மலையடிவாரத்திற்குத் தூக்கிக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறி அந்தத் துயரச் செய்தியைத் தெரிவித்துள்ளனர். பக்திப் பயணமாகச் சென்ற இடத்தில் ஒரு இளம் உயிர் இப்படிப் பாதியிலேயே பிரிந்தது, கூட வந்த நண்பர்களையும் அந்தப் பகுதியில் இருந்த மற்ற பக்தர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோடைக்காலம் என்பதால் மலையேறுபவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், இந்த மாணவனின் மரணம் மலையேறும் மற்ற பக்தர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. படிக்கும் வயதில் ஆசை ஆசையாகப் படிக்க வந்த மாணவன், இப்படிப் பிணமாகத் திரும்பியது அவன் குடும்பத்தாருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!