"விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - திருமாவளவன்
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவாத அரசியல் புகுத்தப்படுவதைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான விசிக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவின் திட்டங்கள் ஒருபோதும் பலிக்காது என முழங்கினார்.
பாஜகவின் ரூபங்கள்: திருப்பரங்குன்றம் விவகாரம் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டமிட்ட சதி என்று குறிப்பிட்ட திருமாவளவன், எப்படியாவது தமிழகத்தில் மதப் பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் காலூன்ற அவர்கள் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். "பாஜகவின் ஜம்பம் பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் வேண்டுமானால் பலிக்கலாம்; ஆனால், சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் உங்கள் ஆட்டம் செல்லுபடியாகாது. பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும், தமிழக மக்கள் அவர்களை நுழைய விடமாட்டார்கள்" என்று அவர் எச்சரித்தார்.
விஜய் மற்றும் சீமான் மீது விமர்சனம்: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரையும் கடுமையாகச் சாடிய திருமாவளவன், "விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" என்று அதிரடியாகக் கூறினார். விஜய் ஆர்.எஸ்.எஸ்-க்காகவே கட்சி தொடங்கியுள்ளதாகவும், அவர் திமுகவை மட்டுமல்ல, பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளையும் அழிக்கப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் அனுபவம் இன்றி நேரடியாக ஆட்சிக்கு வரத் துடிக்கும் விஜய்யின் செயல் 'அரசியல் அறியாமை' என்றும், தமக்கு பதவி ஆசை இருந்திருந்தால் என்றோ விஜய்யின் பின்னால் சென்றிருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியும் கொள்கையும்: சீமான் பிரபாகரன் பெயரைச் சொல்லித் தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், திராவிடக் கோட்டையை இடிக்கப் பார்ப்பனியம் என்ற கடப்பாரையை எடுத்தால் விசிக வேடிக்கை பார்க்காது என்றார். "நாங்களும் திமுகவை விமர்சித்துள்ளோம், ஆனால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைதூக்கப் பார்க்கும்போது, அவர்களை வீழ்த்த நாங்கள் திமுகவுடன் இணைந்து நிற்போம். எங்களுக்குத் தொகுதி முக்கியமில்லை, கொள்கையே முக்கியம். நாளைக்கே எங்களை விட்டு திமுக விலகினாலும் கவலையில்லை; ஆனால் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்" என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!