வாக்காளர் அடையாள அட்டையில் எழுத்துப் பிழையா? ஓட்டுப் போடத் தடை இல்லை... தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை எவ்விதத் தடையுமின்றி ஆற்றுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, வாக்குப்பதிவின்போது ஆள்மாறாட்டத்தைத் தவிர்க்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள 'வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை' (EPIC) மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே 100 சதவீத வாக்காளர்களுக்கும் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், ஓட்டுப் போட வரும்போது இதனைத் தவறாமல் எடுத்து வருமாறு வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டையில் சிறு அச்சுப் பிழைகள் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தாலும், அந்த வாக்காளரை அடையாளம் காண முடிந்தால் அதனைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வேறொரு சட்டமன்றத் தொகுதியில் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும், தற்போதைய வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அந்த அட்டையைப் பயன்படுத்தியே ஓட்டுப் போடலாம். இருப்பினும், அடையாள அட்டையில் உள்ள புகைப்படம் மங்கலாகவோ அல்லது அடையாளம் காண முடியாதவாறு இருந்தாலோ, வாக்காளர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு மாற்றாக ஆதார் அட்டை உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டித் தங்களின் அடையாளத்தை மெய்ப்பித்து வாக்களிக்கலாம்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அந்த 12 முக்கிய மாற்று ஆவணங்கள்
ஆதார் அட்டை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி அட்டை
வங்கி அல்லது அஞ்சலகப் புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள்
தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
ஓட்டுநர் உரிமம் (Driving License)
பான் கார்டு (PAN Card)
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (NPR) கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
இந்தியக் கடவுச்சீட்டு (Passport)
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
மத்திய, மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கிய தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (UDID)
இந்த வசதிகளைப் பயன்படுத்தி அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்குகளைச் செலுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!