20 லிட்டர் தண்ணீர் கேன் விலை இனி ரூ 55... தமிழகம் முழுவதும் 1840 நிறுவனங்கள் விலையை உயர்த்தின!
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னரே, தாகம் தணிக்கும் குடிநீரின் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக, பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை சர்வதேசச் சந்தையில் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனுடன் மின்சாரக் கட்டண உயர்வும் சேரவே, வேறு வழியின்றித் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்து எண்ணூற்று நாற்பது குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் விலையேற்றத்தை அமல்படுத்தியுள்ளன. கடந்த 15ம் தேதி முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
புதிய விலை பட்டியலின்படி, சில்லறை விற்பனையில் ரூ20க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தற்போது ரூ 25 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நடுத்தரக் குடும்பங்கள் அதிகம் பயன்படுத்தும் 5 லிட்டர் பாட்டிலின் விலை ஐம்பது ரூபாயிலிருந்து எழுபது ரூபாயாக எகிறியுள்ளது. குறிப்பாக, வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு விநியோகம் செய்யப்படும் 20 லிட்டர் குடிநீர் கேன்களின் விலை45லிருந்து 55ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான 200 மில்லி மற்றும் 500 மில்லி பாட்டில்களும் தலா 2 முதல் 4 ரூபாய் வரை விலை கூடியுள்ளதால், வெளியூர் பயணம் மேற்கொள்வோர் கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது.
சர்வதேசப் போர்ச் சூழலால் பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும், ரயில்வே சரக்குக் கட்டண உயர்வும் இந்த விலை மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், உயிர்நாடியான குடிநீரின் விலையும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் உழைக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, இந்த விலை உயர்வு பொதுமக்களின் மாதந்திர பட்ஜெட்டில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!