"இத்தனை வருஷமா எங்கே போனீங்க?" - செல்வப்பெருந்தகை காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்லும்போது பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகைக்குக் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் செல்வப்பெருந்தகை மக்களைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
அவர் கிராமத்திற்குள் நுழைந்தவுடனேயே, அங்கு திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். "கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு நீங்கள் வரவே இல்லை. இப்போது தேர்தல் வருவதால் எங்களைச் சந்திக்க வருகிறீர்களா? அப்போது எங்கே சென்றீர்கள்?" என மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.
கோட்டூர் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கடந்த சில ஆண்டுகளாகச் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். "நாங்கள் மீண்டும் உங்களை எப்படி நம்புவது?" எனச் சட்டமன்ற உறுப்பினரை நோக்கி அவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
பொதுமக்களின் ஆவேசமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் செல்வப்பெருந்தகை திணறினார். அவர்களைச் சமாதானப்படுத்த அவர் முயன்றபோதும், மக்கள் விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அவர், காரில் ஏறி அங்கிருந்து கிளம்ப முயன்றார்.
இருப்பினும், கார் செல்ல முடியாதபடி மக்கள் தடுத்ததால் பரபரப்பு அதிகரித்தது. பின்னர் அங்கிருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தலையிட்டு, காரை மறித்த மக்களைச் சமாதானப்படுத்தி வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன் பிறகே செல்வப்பெருந்தகை அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!