மாம்பழ சின்னம் யாருக்கு... இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை! அன்புமணி Vs ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உட்கட்சிப் பூசல் மற்றும் 'மாம்பழம்' சின்னம் தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவும் இந்த மோதல், மாம்பழ சின்னம் யாருக்கு என்கிற அளவில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது.
பாமகவுக்கு மாம்பழச் சின்னத்தை ஒதுக்கி, அது தொடர்பான கடிதத்தை அன்புமணி ராமதாஸின் முகவரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து மருத்துவர் ராமதாஸ் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
அன்புமணியின் பதவிக்காலம் 2025 மே மாதமே முடிந்துவிட்டது. அவர் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தன்னைத் தலைவராகக் காட்டி வருகிறார். எனவே, தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பான கடிதத்தை அவரிடம் வழங்கியது சட்டவிரோதமானது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மாம்பழச் சின்னத்தை முடக்கும் என்று உறுதியளித்ததாகவும், ஆனால் இதுவரை அவ்வாறு செய்யவில்லை என்றும் ராமதாஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் மற்றும் 2025 தொடக்கத்தில் இருந்தே பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பகிரங்கமாகத் தெரிந்தன. ராமதாஸ் தன்னைத் தலைவராக அறிவித்துக் கொண்ட நிலையில், அன்புமணி தான்தான் இன்னும் தலைவராக நீடிப்பதாகக் கூறி வருகிறார். இருவரும் தனித்தனியாகப் பொதுக்குழுக்களைக் கூட்டித் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
கட்சிக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அன்புமணியின் தி.நகர் முகவரிக்குச் செல்வதையும், உண்மையில் தைலாபுரம் தோட்டம் அல்லது தேனாம்பேட்டை அலுவலகத்திற்குத்தான் அவை வர வேண்டும் என்பதும் ராமதாஸ் தரப்பின் முக்கியப் புகாராக உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராமதாஸ் மட்டுமே கூட்டணி குறித்துப் பேச அதிகாரம் படைத்தவர் என்றும், அன்புமணி நடத்தும் பேச்சுவார்த்தைகள் செல்லாது என்றும் ராமதாஸ் தரப்பு ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, "உட்கட்சி விவகாரங்களில் முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை; இதனைச் சிவில் நீதிமன்றம் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கின் தீர்ப்பு அல்லது நீதிமன்றம் பிறப்பிக்கும் இடைக்கால உத்தரவு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் காரணியாக அமையப்போகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!