சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் மாரடைப்பால் உயிரிழப்பு!
வங்கதேசத்தில் இருந்து நுரையீரல் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெறுவதற்காகச் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட பெண் ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தின் டாக்காவைச் சேர்ந்தவர் அக்லிமா அக்தர் (32). இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்காக, நேற்று (டிசம்பர் 13) தனியார் விமானம் மூலம் டாக்காவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
டாக்காவில் இருந்து விமானம் சென்னை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது, நடுவானில் அக்லிமா அக்தருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக விமானப் பணிப்பெண்கள் இந்தத் தகவலை விமானிக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, விமானி சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதால், விமான நிலைய மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவசரச் சிகிச்சைக்குரிய ஏற்பாடுகளுடன் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனே மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் சென்று அக்லிமா அக்தரைப் பரிசோதித்த போது, அவர் விமான இருக்கையில் சாய்ந்தபடி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த அக்லிமா அக்தரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சோகமான சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!