குரங்குகள் ஒன்று கூடி தாக்கியதில் பெண் பலி!
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்திபாலம் கிராமத்தில், குரங்குகள் தாக்கியதில் 68 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த தானபோயின சின்ன புல்லி என்ற மூதாட்டி, தனக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தனது மகளின் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போலத் தனது விளைநிலத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மறைந்திருந்த குரங்குகள் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்து கொண்டன.
எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த மூதாட்டி, ஆக்ரோஷமாகப் பாய்ந்த குரங்குகளிடம் இருந்து உயிரைக் காத்துக் கொள்ளத் தலைதெறிக்க ஓடினார். அந்தப் பதற்றத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்குத் தலையிலும், உடலின் பல பகுதிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததால், அவருக்கு உடனடி உதவி கிடைக்கவில்லை. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சமீபகாலமாக ஆந்திராவின் கிராமப்புறங்களில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து அவை தாக்குவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். "வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இனி ஒரு உயிர் கூட இப்படிப் போகக் கூடாது" எனப் பெத்திபாலம் கிராம மக்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!