நேற்று பிறந்தநாள்... இன்று இறந்தநாள் | பணிவின் சிகரம்... யார் இந்த ஏவிஎம் சரவணன்?
தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரை பதித்த ஏவிஎம் புரொடக்ஷன்ஸின் நிர்வாகி ஏவிஎம் சரவணன் அவர்கள், நேற்று தனது 86-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், இன்று அதிகாலை காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் சூர்யா மணி என்ற முழுப் பெயர் கொண்ட இவர், இன்று காலை 5.30 மணிக்கு வயது மூப்புக் காரணமாக உயிரிழந்தார்.
பணிவின் சிகரம்
ஏவிஎம் சரவணன் அவர்கள், அவரது தந்தையும் நிறுவனருமான ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் மூன்றாவது மகன் ஆவார். தந்தைக்குப் பிறகு ஏவிஎம் நிறுவனத்தின் சகாப்தத்தைத் தொடர்ந்து நடத்திய இவர், தொழில் நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
எப்போதும் கைகளைக் கட்டிக் கொண்டே நிற்கும் அவரது எளிமைக்காகவே திரையுலகில் இவர் 'பணிவின் சிகரம்' என்று அன்புடன் அழைக்கப்பட்டார். 1958-ஆம் ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சரவணன், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார்களின் வளர்ச்சிக்குப் பின்புலமாக இருந்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக உடல்நிலை காரணமாக நடக்க முடியாமல் இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அண்மையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். தற்போது நிறுவனத்தை அவரது மகன் எம்.எஸ். குகன் நிர்வகித்து வருகிறார்.
ஏவிஎம் நிறுவனத்தை அதே பாரம்பரியத்துடன் நடத்திச் சென்றதில் சரவணனின் பங்கு அளப்பரியது. அவர் தயாரிப்பில் வெளியான பல படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான மைல்கற்களாக அமைந்தன:
'நானும் ஒரு பெண்', 'சம்சாரம் அது மின்சாரம்', 'மின்சார கனவு', 'சிவாஜி: தி பாஸ்', 'வேட்டைக்காரன்', 'அயன்'. திரைப்படங்கள் போலவே, தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து, பன்முகத்தன்மையுடன் ஏவிஎம் நிறுவனத்தை அவர் நிலைநிறுத்தினார்.
மறைந்த ஏவிஎம் சரவணன் அவர்களின் உடல், தற்போது அஞ்சலிக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 4 மணி வரை பொது அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். அதன் பின்னர், ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்திலேயே அமைந்துள்ள ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!