அரசு கேபிள் டிவிக்கு 50 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள்... தமிழகம் முழுவதும் உள்ளூர் ஆபரேட்டர்களுக்கு அழைப்பு!
![செட்டாப் பாக்ஸ்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/ee1615b399e6de69c2601f419eef83b4.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 இலட்சம் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ரூபாய் 140 + GST என்கிற குறைந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி சேவைகளை பொது மக்களுக்கு சிறந்த முறையில் வழங்கி வருகிறது. உயர் வரையறை ஹெச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்களின் கோரிக்கைக்கு இணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 50 இலட்சம் உயர் வரையறை செட்டாப்பாக்ஸ்களை விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக இரண்டு இலட்சம் HD செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு, சந்தாதாரர்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேவைக்கேற்றவாறு HD செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவதற்குப் போதுமான செட்டாப் பாக்ஸ்கள் கையிருப்பில் உள்ளன. HD செட்டாப்பாக்ஸ்கள் தேவைப்படும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ. 500/- வைப்புத் தொகை செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் HD செட்டாப் பாக்ஸ்களை பெற்றுப் பயனடையுமாறு அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு பெற்று, செயலிழக்க நிலையில் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி HD செட்டாப் பாக்ஸ்களைச் செயலாக்கம் செய்யவும், தவறும் பட்சத்தில் அப்பகுதியில் புதிய உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நிறைவான சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக உள்ளூர் கேபிள் ஆபரேட்டராக பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tactv.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!