சென்னையை தொடர்ந்து புதுவையிலும் மேகவெடிப்பு?! மீட்பு குழுவினருக்கு அவசர சுற்றறிக்கை!
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேக வெடிப்பு ஏற்பட்டதில் நகரின் பல பகுதிகளிலும் 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.
இதனிடையே வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் புதுச்சேரியில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய கனமழை 12 மணி வரை கொட்டித் தீர்த்தது. இதனால் ரெயின்போ நகர், பூமியான்பேட்டை பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவசர சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அவசர கால மீட்பு குழு மற்றும் துறை அதிகாரிகளும் கட்டுப்பாட்டு அறைகளை திறந்து தயார் நிலையில் இருக்க வேண்டும். மேக வெடிப்பை முன்கூட்டியே கணிக்க முடியாது அது நடந்த பின்னரே கண்டறிய கூடும் என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது.
மேக வெடிப்பால் பல மாநிலங்களில் இயற்கை பேரிடர்கள் நடந்து வருகின்றன. சென்னைக்கு மிக அருகில் புதுச்சேரி அமைந்துள்ளதால் அவசர கால மீட்பு குழு மற்றும் உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, மின்சாரம், காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற தேவையான மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயாராக இருப்பது அவசியம். அவசர கால மீட்புக் குழுவிற்கு துறை ரீதியாக தலைமை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடப்பாண்டில் மேகவெடிப்பு முதல்முறையாக நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியிலும் அது போன்ற ஒரு சூழல் ஏற்படுமோ என பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்..
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
