அக்னிபாத் ராணுவ வீரர்கள் தேர்வு தொடங்கியது... கலெக்டர் நேரில் ஆய்வு!
தூத்துக்குடியில் அக்னிபாத் ராணுவ வீரர்கள் தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வை ஆட்சியர் லட்சுமிபதி, எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான தேர்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று அதிகாலை தொடங்கியது.
இந்த முகாம் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் 1,000 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் ராணுவ உயர் அதிகாரிகள் கர்னல் சுதீப் சட்டர்ஜி, நீலம் குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 140 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு தேர்வு நடத்தினர். நேற்று அதிகாலையில் தேர்வு தொடங்கியதால், நேற்று முன்தினம் இரவு முதல் விண்ணப்பதாரர்கள் மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வந்து குவிந்தனர். அவர்கள் தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
பின்னர் அதிகாலையில் உடற்தகுதி தேர்வு நடந்தது. நேற்று முதல் நாளில் மொத்தம் 875 பேர் தேர்வு முகாமில் பங்கேற்றனர். இவர்களுக்கு ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த உடற்தகுதி தேர்வில் மொத்தம் 219 பேர் தகுதி பெற்றனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஆள்சேர்ப்பு முகாமை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கம் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
அனைத்து தேர்வு நடவடிக்கைகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டன. இன்றும் தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கான தேர்வு முகாம் நடக்கிறது. முன்னதாக இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முகாம் அடிப்படை பணிகளை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் ஒருங்கிணைந்து செய்து இருந்தார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!