தனது சொந்த வீட்டை கல்விக் கூடமாக மாற்றி, மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஐஏஎஸ் அதிகாரி... குவியும் பாராட்டுக்கள்!

 
ராஜமாணிக்கம்

மதுரையில், தனது பூர்வீக வீட்டை, ஏழை, எளிய மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக கல்வி கூடமாக மாற்றி, கடந்த 7 வருடங்களாக சேவையாற்றி வருகிறார் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி. ராஜமாணிக்கம். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். வெறும் கல்விக் கூடமாக மட்டுமல்லாமல், பல்வேறு விதமான பயிற்சிகளும் மாணவர்களுக்கு இந்த கோடை விடுமுறை நாட்களில் அளிக்கப்படுகிறது.

மதுரை மாவட்டம் திருவாதவூரைச் சேர்ந்தவர் எம்.ஜி.ராஜமாணிக்கம். தற்போது கேரள மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் ராஜமாணிக்கம், அவருடைய பள்ளிக் கல்வியை மதுரை செளராஷ்டிரா பள்ளியிலும், முதுநிலை பட்டப் படிப்பை கோவையிலும் முடித்து விட்டு, அதன் பின்னர் குடிமைப் பணித் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். பின்னர்,  கேரளாவில் திருச்சூர் உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கிய ராஜ மாணிக்கம், கொச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி, தற்போது கேரள மாநில உள்ளாட்சித் துறையின் முதன்மை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி நிஷாந்தினி திருவனந்தபுரம் காவல் துறையில் துணைத் தலைவராக பணிபுரிந்து வருகிறார். 

நிஷாந்தினி

இந்த தம்பதியர் இருவருமே அரசு பணியோடு பல்வேறு சமூக பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, சென்னை மழை வெள்ளத்தில் மிதந்த போது, ‘அன்போடு கொச்சி’ என்ற கேரள அமைப்பின் மூலமாக சென்னையில் இருப்பவர்களுக்கு உதவிகரம் நீட்டும் முயற்சியில் பெரும்பங்காற்றியவர் ராஜ மாணிக்கம். 

இந்நிலையில், மதுரை திருவாதவூரில் தான் பிறந்த வீட்டை, ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்காக கல்விக்கூடமாக  மாற்றியுள்ளார். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதத்தில் கடந்த 7 வருடங்களாக இது செயல்பட்டு வருகிறது. இந்த வருட கோடை விடுமுறையில் இருந்து பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நாட்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் நடத்தி வருகிறார். 

கோடைகாலத்தில் பணம் செலவழித்து பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் ஏக்கத்துடன் இருக்கும் ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற, தற்போது பணியில் உள்ள அந்த பகுதியில் வசிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு தனது பூர்வீக வீட்டில் இலவசமாக எழுத்துத் திறன், ஓவியம், சிலம்பம், வளரி, யோகா, தையல், தட்டச்சு என 12 வகையான பயிற்சிகளைக் கற்று தருகிறார்கள். 

நிஷாந்தினி

ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்துக்கு உதவியாக முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் தர்மலிங்கம், ஆசிரியர்கள் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் செயலாற்றி வருகிறார்கள். இவரின் இந்த முயற்சி அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web